×

குரு தரும் யோகங்கள் என்ன?

யோகம் என்ற வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று நினைப்பது தவறு. யோகம் என்றால் இணைவு என்று பொருள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைவது யோகத்தினைத் தரும். இது நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு நேரெதிராக மாற்றுப் பலனையும் தரலாம். நாம் காணும் இந்த யோகங்கள் அனைத்தும் குருபகவான் சம்பந்தப்பட்டவை என்பதாலும், குரு பகவான் அடிப்படையில் சுபகிரகம் என்பதாலும் பெரும்பாலும் இந்த யோகங்கள் யாவும் நற்பலனைத் தரும் விதமாகவே அமைந்துள்ளன. இந்த யோகங்கள் வலிமையாகச் செயல்பட கோச்சாரத்தில் குருபகவானின் பார்வையும் துணை செய்யும். குருவருள் இருந்தால் திருவருள் (லட்சுமி கடாட்சம்) நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு இந்த யோகங்களே சான்று.

கஜகேசரி யோகம்


ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு பகவான் அமர்ந்திருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அழகான உடலமைப்பும், செல்வச் செழிப்பும் பெற்றிருப்பதோடு அறிவாளியாகவும் விளங்குவார்கள். அனைத்து விதமான நற்குணங்களும் பெற்றிருப்பார்கள். அரசாங்கத்தில் உயர்பதவி அல்லது அதற்கு நிகரான பதவியில் இருப்பார்கள்.

சாமர யோகம்

லக்னாதிபதி 1, 4, 7, 10ல் உச்சமடைந்து குரு பகவானின் பார்வை அவர் மீது விழுந்தால் சாமர யோகம் உண்டாகும். சாமர யோகத்தில் பிறந்தவர்கள் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பெரும் தனவந்தராகவோ இருப்பார்கள். நீண்ட ஆயுளையும், தீர்க்கமான அறிவையும், பல கலைகளை கற்றறிந்தவர்களாகவும், வாக்குவன்மை உடையவர்களாகவும் சிறப்பாக வாழ்வார்கள்.

கலாநிதி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு இரண்டிலோ அல்லது ஐந்திலோ குரு அமர்ந்து அவரை புதன் அல்லது சுக்கிரன் பார்த்தால் கலாநிதி யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நற்குணங்கள் பொருந்தியவராகவும், கற்றறிந்தவராகவும், நோய் குறித்த பயம் இல்லாதவராகவும் இருப்பார்கள். பொதுமக்களின் அன்பினைப் பெறுவதற்கும், பகைவர்களே இல்லாத தலைவராக உருவெடுப்பதற்கும் இந்த யோகம் தேவை.

அம்ச யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அம்ச யோகம் உண்டாகும். இவர்கள் இனிமையான குரல் வளம், அழகிய தோற்றம், புத்தி கூர்மை, தீர்க்காயுள் ஆகியவற்றுடன் அம்சமாக வாழ்வார்கள்.

கௌரி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய கேந்திர த்ரிகோண ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்து அவரை குரு பகவான் பார்த்தாலும் அல்லது இணைந்தாலும் கௌரி யோகம் உண்டாகும். கௌரி யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல்வாகினை உடையவர்களாகவும், அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாகவும், நற்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

சரஸ்வதி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் குருபகவான் ஆட்சி, உச்ச பலத்துடன் அமர்ந்து புதன் அல்லது சுக்கிரனுடன் இணைந்திருந்தால் அந்த ஜாதகர் சரஸ்வதி யோகத்தினைப் பெற்றிருப்பார். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நுண்ணறிவாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், கதை, கவிதை, நாடகங்கள் எழுதுபவராகவும் இருப்பார். சாஸ்திரங்களைக் கற்றறிந்து அதனை காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றியமைத்து மக்களை நல்வழிப்படுத்துபவராக இருப்பார். இந்த யோகத்தினைப் பெற்றிருப்பவர்கள் உரிய நேரத்தில் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவார்கள். நல்லாசிரியர் விருது பெற சரஸ்வதி யோகம் அவசியம் தேவை.

விரிஞ்சி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவக அதிபதியுடன் குரு இணைந்து, சனியின் பார்வையும் இணைவும் நிகழாமல் இருந்தால் அவருக்கு விரிஞ்சி யோகம் உண்டாகும். இவர்கள் நல்ல ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். பிரம்மத்தை உணர்ந்தவர்களாகவும், வேத நெறிகளை கடைபிடிப்பவர்களாகவும், ஒழுக்க சீலர்களாகவும், நிதானம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த யோகத்தினைப் பெற்றவர்களுக்கு அரசு மரியாதை கிடைக்கும்.

பாஸ்கர பண்டித யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சூரியனும் இணைந்து 2 அல்லது 11ல் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். இவர்கள் நற்கருத்துக்களை பேசிக்கொண்டே இருப்பார்கள். தங்களுடைய நாவன்மையால் நல்ல புகழினைப் பெறுவார்கள். அந்தணர் அல்லாத மற்ற வர்ணத்தாருக்கு சாஸ்திரங்களை போதிக்கும் ஆசிரியர்களாகவும், அனைத்து வித்தைகளையும் அறிந்தவர்களாகவும், தனக்குக் கீழே பல சீடர்களைக் கொண்டவர்களாகவும், கண்டிப்பு நிறைந்தவர்களாகவும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் தருபவர்களாகவும் இருப்பார்கள்.

குரு சந்திர யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனோடு குரு பகவான் இணைந்திருந்தால் குருசந்திர யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அழகான உடலமைப்பினைப் பெற்றிருப்பதோடு மென்மையானவர்களாகவும், எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த யோகத்தினைக் கொண்டவர்களோடு நட்புறவு கொள்ள எல்லோரும் விரும்புவார்கள்.

குரு மங்கள யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் செவ்வாயும் இணைந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். இந்த யோகத்தினைப் பெற்றவர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாகவும், நீதி, நேர்மை, நாணயம் பற்றி பேசுபவர்களாகவும், சட்டம் ஒழுங்கினைக் காப்பவர்களாகவும் இருப்பார்கள். காவல்துறையில் உயரதிகாரியாகப் பணிபுரிய இந்த யோகம் நிச்சயம் தேவை.

வித்வாம்ச யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் புதனும், குருவும் இணைந்து 1, 2, 4, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இவர்கள் ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் அறிந்தவர்களாகவும், நுண்ணறிவினைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தற்காலத்தில் சி.ஏ., படித்து மிகச்சிறந்த ஆடிட்டராக உருவெடுக்க இந்த யோகம் அவசியம் தேவை. எந்தத் துறைக்குள் நுழைந்தாலும் இவர்களது திறமை வெளிப்படும். விருதுகளை வாங்கிக் குவிப்பவர்களாக
இருப்பார்கள்.

குரு சுக்கிர யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் ஒரே இடத்தில் இணைந்து அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். பெரும்பாலானோர் இந்த யோகத்தினைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். வியாழ பகவான் என்பவர் தேவர்களின் குருவாகவும், சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குருவாகவும் இருப்பதால் ஒருவருக்கொருவர் பகையாளிகளாகச் செயல்படுவார்கள் என்றும், இந்த யோகத்தினை உடையவர்களுக்கு தீய பலனே கிட்டும் என்றும் தவறாக சித்தரிக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். குரு, சுக்கிரன் இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடிப்படையில் இவர்கள் இருவரும் சுபகிரகங்கள் என்பதால் நீ அதிக நற்பலனைத் தருகிறாயா அல்லது நான் அதிக நற்பலனைத் தருகிறேனா என்று போட்டி போட்டுக்கொண்டு அந்த ஜாதகருக்கு அதிகப்படியான நற்பலன்களையே அள்ளித் தந்து கொண்டிருப்பார்கள் என்று ஜாதகாலங்காரம் என்ற ஜோதிட நூல் உரைக்கிறது. இதனடிப்படையில் நல்ல பாவகங்களில் குருவும் சுக்கிரனும் இணைந்திருந்தால் நிச்சயமாக நற்பலன்களே கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குரு சண்டாள யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் இந்த யோகம் மட்டும் உண்டாகக் கூடாது. அதாவது குருவும், சனியும் இணைந்து ஜாதகத்தில் எந்த வீட்டில் அமர்ந்திருந்தாலும் இந்த யோகத்தினைப் பெற்றிருப்பார்கள். இதனை யோகம் என்ற பெயரில் அழைத்தாலும் இது உண்மையில் தோஷமான அமைப்பு ஆகும். இந்த அமைப்பினை உடையவர்கள் பிரம்மஹத்தி தோஷத்தினைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் அஷ்டமி தோறும் பைரவர் பூஜை செய்து வருவதால் தோஷத்திலிருந்து விடுதலை பெற இயலும். அல்லது வீட்டினில் நாய் ஒன்றினை வளர்த்து அதனை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தாலும் தோஷத்தின் தாக்கம் குறையும்.

நாகேந்திர யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் ராகுவும் இணைந்து 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்திருந்தால் நாகேந்திர யோகம் உண்டாகும். இவர்கள் ஆராய்ச்சியாளர்களாகவும், விஞ்ஞானத் துறையில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் அத்தனை எளிதாக எல்லோராலும் நெருங்கிப் பழக இயலாது. தனித்துவம் பொருந்தியவர்களாகவும், தனிமையை விரும்புவர்களாகவும், பல ரகசியங்களை தனக்குள் அடக்கியவர்களாகவும் இருப்பார்கள்.

பிரம்ம ஞான யோகம்


ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் கேதுவுடன் இணைந்து ஜென்ம லக்னம், 2, 12 ஆகிய இடங்களில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இவர்கள் பெரும்பாலும் சந்நியாசிகளாகவோ, தத்துவ சிந்தனைகளை உடையவர்களாகவோ இருப்பார்கள். இவர்களுடைய பேச்சினில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமான கருத்துக்கள் அதிகமாக இடம்பெறும். தான தருமத்தில் அதிக ஈடுபாடு உடையவர்களாகவும், குடும்ப வாழ்க்கையில் பற்றற்றவர்களாகவும் இருப்பார்கள்.

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED மாணவர்கள் கல்வியில் மேம்பட என்ன செய்யலாம்?